ஊட்டச்சத்து சுரங்கம்
பொதுவாக இன்றைக்கு விலை கூடிய, வெளிநாடுகளில் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்களை அதிக விலை கொடுத்து வாங்கத் தயாராக இருக்கிறோம். சாலட், பீட்சா என நமக்கு நெருக்கமில்லாத உணவு வகைகளில் அயல் கீரைகள், காய்கறிகளை கலந்து பரிமாறினாலும் சுவைக்கிறோம். ஆனால், நம் நாட்டிலேயே எளிதாகக் கிடைத்தாலும் சத்தான உணவு வகைகளில் நாம் பெரிதும் மறந்துவிட்டது கீரைகளைத்தான்.
கீரைகள் நிச்சயமாக விலை கூடியவை அல்ல. மிக எளிதாகவும் குறைந்த விலையிலும் கிடைக்கக்கூடியவை. அதிலும் நம் நாட்டில் மிகச் சாதாரணமாக நமது தோட்டங்களிலும் புழக்கடைப் பகுதிகளிலும் எளிதாக விளையும் குப்பைமேனிக் கீரை, பருப்புக் கீரை எனப் பல கீரை வகைகளைப் பார்க்கலாம். அந்தக் காலத்தில் வீட்டிலிருக்கும் சிறிய இடத்திலும் பல கீரை வகைகள் வளர்ந்திருக்கும். இன்றைக்கு நகர்ப்புறங்களில் அப்படிக் கீரை வகைகள் வளர்க்கப்படுவதைப் பெரிதாகப் பார்க்க முடிவதில்லை.
முருங்கைக் கீரை சத்துகளுக்காக உலகப் புகழ்பெற்றது. கல்யாண முருங்கை போன்றவை மருத்துவ குணம் கொண்டவை. சட்னி, துவையலுக்கு நாம் பயன்படுத்தும் கொத்துமல்லித் தழை, புதினா, கறிவேப்பிலை போன்றவையும் கீரை வகைகளே. இப்படிப் பலரும் எளிதாகவும் சுவையாகவும் சமைக்கக்கூடிய கீரை வகைகள் நம்மிடையே உண்டு. இவை சாதாரணமாகக் கிடைக்கக்கூடியவை. இவை அளிக்கும் சத்துகளோ ஏராளம்.